பெரம்பலுார்:சாலை பணிக்கான தொகையை விடுவிக்க, ஒப்பந்ததாரரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வஹீதா பானு, 53; ஜெயங்கொண்டம் யூனியன் அலுவலக ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர்.
இவர், சாலை பணிக்கான தொகையை விடுவிக்க, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மணிமாறன் என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
கொடுக்க விரும்பாத மணிமாறன், அரியலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் இரவு, ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை அருகே, வஹீதாபானுவிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை மணிமாறன் கொடுத்துஉள்ளார்.
அங்கு மறைந்திருந்த அரியலுார் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் மற்றும் போலீசார், வஹீதா பானுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.