பெ.நா.பாளையம்:கோவை அருகே மின் கம்பம் சாய்ந்து, காட்டு யானை பரிதாபமாக பலியானது.
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்து கொல்லனுார் மலையோர கிராமம் உள்ளது. இங்குள்ள குருவம்மாள் கோவிலை ஒட்டிய பள்ளத்தின் அருகே, நேற்று காலை மின் கம்பம் சாய்ந்த நிலையில், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.
சம்பவ இடத்தை, கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் பார்வையிட்டார். மின் கம்பம் முறிந்து, யானையின் மீது விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது தெரியவந்தது.
வனத்துறை மருத்துவ குழுவினர், யானையின் உடலை கூராய்வு செய்து, அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.
தமிழகத்தில் சில வாரங்களாக தொடர்ந்து நடைபெறும், மின் விபத்துகளில் சிக்கி, காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்களால், வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.