ராமேஸ்வரம்:கச்சத்தீவில் ரகசியமாக புத்தர் சிலையை நிறுவி உள்ளதால், எதிர்காலத்தில் புதிய வரலாற்றை உருவாக்கவும், தற்போதைய சர்ச்சை அகற்றவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ.,யில் பாக்ஜலசந்தி கடலில் கச்சத்தீவு உள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான இத்தீவில், இருநாட்டு மீனவர்கள் தங்கி மீன் பிடித்து, வலைகளை உலர்த்தினர்.
அந்த காலக்கட்டத்தில், சேதுபதி மன்னரின் அனுமதியுடன் மீனவர்கள் கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் அமைத்தனர். கச்சத்தீவை, 1974ல் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது.
இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோனது. இருப்பினும், கச்சத்தீவு விழாவில் இந்தாண்டு வரை தமிழக பக்தர்கள் பங்கேற்றனர்.
இச்சூழலில், கச்சத்தீவு சர்ச்சில் இருந்து, 100 மீட்டரில் தடுப்பு வேலிக்குள் ரகசியமாக அரச மரம் வளர்த்து, இதன் கீழ், 3 அடி உயர புத்தர் சிலையை சமீபத்தில் நிறுவி உள்ளனர்.
இங்கு, 'சோலார்' மின் விளக்குகள் பொருத்தி, போதிமரம் புத்தர் கோவில் போன்று வடிவமைத்துள்ளனர். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் கச்சத்தீவில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க இலங்கை அரசு திட்டமிடுவதாக தமிழக மீனவர்கள் கூறினர்.
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் என்.தேவதாஸ் கூறியதாவது:
சீனா துாண்டுதலில், இலங்கை அரசு கச்சத்தீவில் புதிதாக புத்தர் சிலை நிறுவி, கோவில் போன்று வடிவமைத்துள்ளது.
இதனால், அந்தோணியார் சர்ச்சுக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும், எதிர்காலத்தில் சர்ச் விழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்க முடியாமல் போகும் நிலையும் உள்ளது.
திட்டமிட்டு புதிய வரலாற்றை உருவாக்க முயலும் இலங்கை அரசின் உள்நோக்கத்தை, மத்திய அரசு முறியடித்து, அங்குள்ள புத்தர் சிலையை அகற்றி, 1974 ஒப்பந்தபடி கச்சத்தீவை சுற்றிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க, வலைகளை உலர்த்த இலங்கையை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.