சென்னை: பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 329 கோடி ரூபாயில், மழை நீர் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து துவங்க தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மழை நீர் கால்வாய் பணிகளை மேற்கொள்வதற்கு, 329 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி 15 மண்டல கண்காணிப்பு அலுவலர்களும் பங்கேற்றனர்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி, உடனடியாக ஒப்பந்தங்களை கோரி, ஏப்ரல் மாதத்திற்குள் மழை நீர் கால்வாய் கட்டும் பணிகளை துவங்க தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டார்.
ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகளுடன், புதிய பணிகளையும் ஆக., மாத இறுதிக்குள் முடிக்க அவர் அறிவுறுத்தினார்.