திருச்சி:வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நால்வர், திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் என்ற கட்சி சார்பில், மூன்று நாட்களுக்கு முன் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் பங்கேற்று, நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, சீமான், நிர்வாகிகள் பிரபு, சாட்டை துரைமுருகன், கலியபெருமாள், இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட பலர் மீது கண்டோன்மென்ட் போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.