திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவமனையில், பிறந்த ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தையை இளம்பெண் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, செரங்காட்டைச் சேர்ந்தவர் கோபி, 34; பனியன் நிறுவன தொழிலாளி.
இவரது மனைவி சத்யா, 30. சத்யாவுக்கு, கடந்த, 19ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இரு நாட்களாக அவருக்கு உதவி செய்து வந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை குழந்தையை கடத்தினார். உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மருத்துவமனை, 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
குழந்தை பிறந்த பின், சத்யாவையும், குழந்தையையும் அவரது மாமியார் உடனிருந்து கவனித்து வந்தார். இரு நாட்களுக்கு முன், 35 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி ஒருவர், சத்யாவுக்கு அறிமுகமாகி பேசி வந்தார்.
உறவு பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவ்வப்போது, சத்யாவுக்கு உதவியபடி குழந்தையை கவனித்து வந்தார். சத்யா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அப்பெண் குழந்தையுடன் மாயமானார்.
'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்ட போது, அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆட்டோவில் தப்பி சென்றது தெரியவந்தது. அப்பெண்ணை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.