பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, கணவரை தாக்கிய, 'டிவி' சீரியல் துணை நடிகை, நடிகரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்,42. இவருக்கும், கோவை பீளமேடு உடையபாளையத்தை சேர்ந்த ரம்யா,30,க்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 19ம் தேதி இரவு ரமேஷ், மனைவி ரம்யாவுடன் பைக்கில் ஜமீன்முத்துார் அருகே சென்றார். அவ்வழியாக வந்த மர்ம நபர், ரமேஷை வழிமறித்து தாக்கிச் சென்றார். காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இவ்வழக்கில், ரமேஷின் மனைவி ரம்யா மீது சந்தேகம் இருந்ததால் பொள்ளாச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறியதாவது:ரமேஷ் தினமும் மதுபோதையில் அடித்து துன்புறுத்தியதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரம்யா, குழந்தைகளுடன்பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவ்வப்போது, குழந்தைகளை அழைத்து வந்து ரமேஷிடம் காண்பித்து செல்வார்.
சென்னை சென்ற அவர், 'டிவி' சீரியல்களில் நடித்தபோது, கோவை பீளமேட்டை சேர்ந்த துணை நடிகர் டேனியல் சந்திரசேகர், 45, உடன் பழக்கம் ஏற்பட்டது. 'டிவி' சீரியல்களில் நடிக்க கூடாது என, ரமேஷ் கண்டித்ததால் விரக்தி அடைந்துள்ளார்.
இதற்கிடையே, ரமேஷ் வீட்டை விற்க உள்ள தகவல் அறிந்து டேனியல், அந்த வீட்டை, 10 லட்சம் ரூபாய்க்கு தருமாறு கேட்டுள்ளார்; 15 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ரமேஷ் தர மறுத்துள்ளார்.
இது குறித்து கேள்விப்பட்ட ரம்யா, டேனியல் சந்திரசேகரிடம், 'ரமேஷை தாக்கி மிரட்டினால் அந்த வீட்டை, 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து தருகிறேன்' என கூறியுள்ளார்.
கடந்த, 19ம் தேதி பைக்கில் வெளியே அழைத்துச் செல்ல, ரமேஷிடம் ரம்யா கூறினார். பொள்ளாச்சி ஜமீன்முத்துார் அருகே சென்றபோது, வழிமறித்த டேனியல், ரமேஷை தாக்கி பிளேடால் கிழித்து விட்டு தப்பிச் சென்றார்.
இருவரையும் கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.