திருவாரூர்:ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில், 100 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆதனுார் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. தஞ்சை நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆதனுார் மண்டபத்தில் குருமூர்த்தி, தன் மனைவி கலைச்செல்வியுடன் வசிக்கிறார்.
இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணமாகி மகள்கள் வெளியூரில் உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட குருமூர்த்தி, தஞ்சாவூரில் வசிக்கும் மூத்த மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். புதுக்கோட்டையில் வசிக்கும் இளைய மகள் வீட்டிற்கு கலைச்செல்வி சென்றுள்ளார்.
மகள்களின் 50 சவரன் நகைகள், குருமூர்த்தி தம்பதிக்கு சொந்தமான, 50 சவரன் நகைகள் என, 100 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வீட்டில் வைத்திருந்தார்.
நீண்ட நாட்களாக குருமூர்த்தி வீடு பூட்டி கிடந்ததை பார்த்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்த குருமூர்த்தி, நகை, பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.