பரமக்குடி:காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தில் தமிழக அரசு அநீதி இழைப்பதாகவும், விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் நாளை (மார்ச் 27) சென்னையில் பாசன இணைப்பு கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டத்திற்கு 2021 பிப்., 17 அடிக்கல் நாட்டப்பட்டது. காவிரி ஆற்றில் கரூர் அருகே மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ., முதல் நிலையாகவும், அங்கிருந்து வைகை வரை 108 கி.மீ.,க்கு 2வது நிலையாகவும், காரியாபட்டி, புதுப்பட்டி, குண்டாறு வரை 34 கி.மீ.,க்கு 3ம் நிலையாகவும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்காக 2021--22ல் தமிழக அரசு ரூ.760 கோடி, 2022--23ல் ரூ.280 கோடி ஒதுக்கியது.
மேலும் மாயனூரில் இருந்து 50 கி.மீ., க்கு 4 பகுதிகளாக பணிகள் நடக்கிறது.
தற்போது 2023-24ல் தமிழக அரசு பொது, வேளாண் பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
இதுகுறித்து காவிரி குண்டாறு, கிருதுமால், வைகை பாசன இணைப்பு கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
தமிழக அரசு காவிரி, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது 7 மாவட்ட விவசாயிகளுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. இதை கண்டித்து நாளை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பர் என்றார்.