திண்டுக்கல்:''கலை, கலாசாரம், பண்பாடு, உணவு முறை, தொழில் ஆகியவற்றை பரஸ்பர முறையில் பரிமாறுவது தான் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நோக்கம்,'' என திண்டுக்கல்லில் குஜராத் பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர்பாய் தின்டோர் பேசினார்.
குஜராத்தில் ஏப்., 17 முதல் 26 வரை நடக்கவுள்ள சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட சவுராஷ்ட்ரா தமிழ் சங்கம் சார்பில் பாரதிபுரம் நாகல்நகரில் விழா நடந்தது.
அமைச்சர் குபேர்பாய் தின்டோர் பேசியதாவது: தமிழகத்தின் பழக்கவழக்கங்கள், சூழல், தொழில், உணவு முறை குஜராத் சூழலை போல உள்ளது. சவுராஷ்டிரா தமிழ் சங்கத்தின் இந்த சங்கம நிகழ்வு அனைவருக்கும் பொதுவானதாகும். மொழி, இனம், ஜாதி என வேறுபடுத்தாமல் அனைவரையும் ஒன்றிணைப்பதே நோக்கமாகும் என்றார்.
குஜராத் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை செயலாளர் முரளி கிருஷ்ணா பேசினார். சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.எஸ்.கே.அருள்ஜோதி, கண்ணன், சிவராமன் முன்னிலை வகித்தனர். துணை பொதுசெயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். சவுராஷ்டிரா சமூக நிர்வாகிகள் சேஷாத்திரி, பிரேம்குமார், முரளி, ஹரிஹரன் பங்கேற்றனர். நிர்வாகி பாபுலால் நன்றி கூறினார்.
அமைச்சர் குபேர்பாய் தின்டோரை வரவேற்க இசைக்குழுவினரின் பக்திப்பாடல் கச்சேரி நடந்தது. அப்போது பெண்கள் கோலாட்டம் ஆடினர். அதை கவனித்த அமைச்சர் குபேர்பாய் தின்டோர் கோலாட்டம் ஆடி உற்சாகமூட்டினார்.