திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ரோட்டை ஆக்ரமித்து கட்டியிருந்த வீட்டை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வீட்டை ரூ.15 லட்சம் செலவில் உரிமையாளர் நகர்த்தியுள்ளார்.
திருச்சுழி அருகே பனையூரை சேர்ந்தவர் லட்சுமணன் 52. மனைவி பஞ்சவர்ணம் முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் 2003ல் பிள்ளையார் நத்தம் - கமுதி ரோடு அருகே 2 மாடி வீடு கட்டினார்.
12 அடி ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பனையூரை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கில் 2021 அக்.28 ல் ஆக்கிரமிப்பில் கட்டிய வீட்டை இடித்து அகற்ற வேண்டும்
அதற்கு 12 வார அவகாசம் வழங்கப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.
20 நாட்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டை இடிக்க முயன்றனர். லட்சுமணன் வீட்டை இடிக்க மனமில்லாமல் வருவாய் துறை ஊராட்சி நிர்வாகத்திடம் 2 மாத அவகாசம் கேட்டார்.
பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வீட்டின் அடித்தளத்தை 25 நாட்களாக தோண்டும் பணி நடந்தது.
அதன் பின் ஜாக்கிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் வீடு நகர்த்தப்பட்டது. தற்போது 20 அடி வரை வீடு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 15 லட்சம் வரை லட்சுமணன் செலவு செய்துள்ளார்.
லட்சுமணன் கூறுகையில் பல லட்சம் செலவில் பார்த்து பார்த்து கட்டிய வீடு இது. இடிக்க மனம் இன்றி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று வீட்டை 20 அடி நகர்த்தியுள்ளேன். தீர்ப்பிற்கு எதிராக அப்பீல் செய்யவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.---