திருநெல்வேலி:''குஜராத் மாநிலம் ராஜ்கோட் சவுராஷ்டிரா பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும்'' என திருநெல்வேலியில் அதன் துணைவேந்தர் கிரிஷ்பாய் பிமானி தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் காசியின் தொன்மையான தொடர்பை புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் விழா சமீபத்தில் நடந்தது. அதேபோல குஜராத் மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் சவுராஷ்டிரா மக்கள் மூலம் பல நூற்றாண்டுகால தொடர்பு உள்ளது.
இந்த பண்டைய தொடர்பை புதுப்பிக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 17 முதல் 30 வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவை குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்துகின்றன.
விழா நாட்களில் குஜராத் மாநிலம் சோமநாதர் கோயில் துவாரகா ராஜ்கோட் ஒற்றுமை சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலை கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 3000 பேர் ஒரு ரயிலில் 300 பேர் வீதம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடக்கிறது. தகுதியானோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். செலவுகளை குஜராத் அரசு மேற்கொள்கிறது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடந்தது. தமிழக மொழியியல் சிறுபான்மை சவுராஷ்டிரா சங்க மாநில தலைவர் எஸ்.ஆர்.அனந்தராமன் துவக்கினார். தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.நாகராஜன் தற்போது குஜராத் மாநிலம் மகேசன் மாவட்ட கலெக்டராக பணிபுரிகிறார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் அவர் விழா குறித்து விளக்கினார். குஜராத் மாநில சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ்பாய் படேல் தமிழகத்திற்கும் குஜராத்துக்கும் இடையிலான கலாசார உறவுகள் குறித்து பேசினார்.
ராஜ்கோட் சவுராஷ்டிரா பல்கலை துணைவேந்தர் கிரிஷ்பாய் பிமானி கூறியதாவது: குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே கல்வி வழியாகவும் நீண்டகால தொடர்பு உள்ளது.
சவுராஷ்டிரா பல்கலை மாணவர்கள் மூவர் முனைவர் பட்ட ஆய்விற்காக தமிழகத்தில் சவுராஷ்டிரர்கள் வசிக்கும் மதுரை உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சவுராஷ்ட்ரா பல்கலையில் தமிழ் குறித்த உயர் கல்வி மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் என்றார்.