நாகப்பட்டினம், : வெளி நாடுகளுக்கு கடத்துவதற்காக, நாகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளி நாடுகளுக்கு கடத்துவதற்காக, அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், நாகை அடுத்த அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நாகை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், பதப்படுத்தப்பட்டு, கடத்துவதற்கு தயாரான நிலையில் ஆயிரம் கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கடல் அட்டைகளை பதுக்கிய நாகை சபரிநாதன், 40; செல்லூர் சுரேஷ், 47; அக்கரைப்பேட்டை செல்வம், 50; ஆகியோரை கைது செய்த போலீசார், கடல் அட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.