விழுப்புரம், : 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக, வங்கி ஊழியரிடம் 1.89 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு, பெரியார் நகரை சேர்ந்த ரவிராஜன், 37; தனியார் வங்கி ஊழியர். இவரது மொபைல் போனுக்கு கடந்த 19ம் தேதி, மர்ம நபர் 'வாட்ஸ் ஆப்' மூலம், பகுதிநேர வேலை இருப்பதாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து, அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த நபர், இணைய வழியில் ஒரு 'லிங்க்' அனுப்பியுள்ளார். அந்த 'லிங்க்'கை தொடர்பு கொண்ட ரவிராஜன் யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை கிரியேட் செய்து, கடந்த 21ம் தேதி 1,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.
அது 1,580 ரூபாயாக திரும்பி வந்தது. 23ம் தேதி 3,500 அனுப்பிய ரவிராஜனுக்கு, 4,930 ரூபாய் வந்துள்ளது.
இதனையடுத்து, அதிக பணம் பெறலாம் என்ற ஆசையில் பல்வேறு தவணைகளில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாயை ரவிராஜன் அனுப்பி உள்ளார். .
அதன் பிறகு மர்ம நபர் பணம் அனுப்பவில்லை. தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிராஜன், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.