விழுப்புரம், : விழுப்புரத்தில் துவங்கிய புத்தக திருவிழாவில், மஞ்சள் பை குறித்து, மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தை பிளாஸ்டிக் மாசில்லாத மாநிலமாக உருவாக்க, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றான பொருள்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தி வருகிறது.
அதனை வலியுறுத்தும் விதமாக 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் புத்தக திருவிழாவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில், வாழை இலைகள், தாமரை இலைகள், பாக்கு மர இலைகள், உலோகத் தட்டுகள், பீங்கான் தட்டுகள், கண்ணாடி குவளைகள், பாட்டில்கள், காகித சுருள், துணிப் பைகள், அலுமினியம், மண்பாண்டங்கள் என ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரங்கில், பிளாஸ்டிக் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் துணி பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் மேற்பார்வையில், அத்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரங்கை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு, 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் மஞ்சள் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார். மக்கும் மற்றும் மக்காத பொருட்கள், தடை செய்யப்பட்டுள்ள பொருள்கள் அதற்கான மாற்றுப் பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நேரடி செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அரங்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.