நெய்வேலி : ''என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் கால நிலை அகதிகள் தான்'' என்று நெய்வேலியில் நடந்த கருத்தரங்கில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
என்.எல்.சி., நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம், உழவர் பேரியக்கம் சார்பில், கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நேற்று நடந்தது. கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், தலைவர் டாக்டர் நவீன் பிரதாப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி எம்.பி., பேசியதாவது:
சட்டசபையில் தொழிற்துறை அமைச்சர் ஒரு ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 1800 பேருக்கு வேலை தருவதாக அவர் சொல்லவில்லை. 1800 பேருக்கு வேலை இருக்கிறது. அதற்கு போட்டி போட வேண்டும். அதில் இடம் கொடுத்தவர்களுக்கு 20 மார்க் கூடுதலாக கொடுக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
நிலம் வைத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஐந்து சதவீதம் பேர் மட்டுமே நிலம் வைத்திருக்கின்றனர். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகின்றனர். விவசாயத்தை அழித்து அது எவ்வளவு பெரிய வளர்ச்சியாக இருந்தாலும் தேவையில்லை.
91 ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுக்கப் போகின்றனர். 91 ஆயிரம் ஏக்கர் என்றால் நெய்வேலியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை வரை உள்ள இடம் அழிய போகிறது. இதனை ஆதாரத்துடன் சொல்கிறேன்.
இது ஏதோ 10, 15 கிராமங்களின் பிரச்னை என்று நினைக்கின்றனர். சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களின் பிரச்னை. இதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கும்.
என்.எல்.சி., ஒன்று மற்றும் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விரைவில் எடுக்கப்பட இருக்கிறது. புதியதாக 3வது சுரங்கத்திற்கு 12 ஆயிரம் ஏக்கர், மொத்தம் 25 ஆயிரம் ஏக்கரை கைப்பற்ற இருக்கின்றனர்.
சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டத்தை தனியாரிடம் கொடுப்பதற்கான ஏலம் கடந்த ஆண்டே விடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தி கொடுக்க போவது யார் தெரியுமா? தமிழக அரசு. இதைத் தாண்டி ஐந்தாவது சுரங்கம் புதிய வீராணம் நிலக்கரி திட்டம். வீராணம் ஏரி அருகே சுற்றி உள்ள பகுதிகளில் வருகிறது.
நான்காவது சுரங்கத்திற்கு 21,000 ஏக்கரும், ஐந்தாவது சுரங்கத்திற்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் எடுப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். தமிழ்நாட்டின் அன்றாட மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட். என்.எல்.சி., நிறுவனம் கொடுப்பது 800 லிருந்து ஆயிரம் மெகாவாட் மட்டுமே .
இதற்கு போய் நாம் நிலத்தைக் கொடுத்து விவசாயத்தை ஏன் அழிக்க வேண்டும். இது வருங்கால பிரச்னை, அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவு பற்றாக்குறை பிரச்னை எல்லாம் 50 ஆண்டுகளுக்கு பின் வரும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் தற்பொழுது ஆரம்பித்து விட்டது. காலநிலை அகதிகளாக போகப் போகிறோம். என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் காலநிலை அகதிகள் தான்.
இவ்வாறு அன்புமணி எம்.பி., பேசினார்.