கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சித் தலைவியின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ,19; இவர் கடலுார் மாவட்டம், கழுதுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் மூன்றாமாண்டு படித்தார். கடந்த 24ம் தேதி மதியம் 2:00 மணியளவில் வீட்டிலிருந்த வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து ஜெகன்ஸ்ரீ தந்தை ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன ஜெகன்ஸ்ரீயை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து புதைத்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வரஞ்சரம் போலீசார், நேற்று இரவு 8:00 மணியளவில், கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அதில், ஜெகன்ஸ்ரீ கொலை செய்து, புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீயின் உடலை தோண்டி எடுக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெகன்ஸ்ரீயை மதுபோதையில் சிலர் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதன்பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை பிடித்து வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த ஜெகன்ஸ்ரீயின் தாய் செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி துணைத்தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.