இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், புதுச்சேரி - திண்டிவனம் இடையே 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இந்த நான்கு வழிச்சாலையில் 8.143 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு, ஐந்து இடங்களில் சுரங்க பாலங்கள், இரு பெரிய பாலங்கள், 5 சிறிய பாலங்கள், 33 பாக்ஸ் கல்வெர்ட், 30 பைப் கல்வெர்ட், இரும்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, நான்கு வழிச்சாலை பணிகள் முழுவீச்சில் முடிந்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சரியான திட்ட வடிவமைப்பு இல்லாததால், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டவில்லை. இதன் காரணமாக விபத்துகள் என்பது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக இரும்பை, ஆரோபுட் சந்திப்பு (திருச்சிற்றம்பலம் செல்லும் சாலை) மற்றும் கீழ்கூத்தப்பாக்கம் ஆகிய சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
இந்த சந்திப்புகள் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இந்த இடங்களில் மேம்பாலங்கள் இல்லாததால், ஆரம்பத்தில் இருந்தே விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால், சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இந்த சாலையில் விபத்துகளைத் தடுக்க ஆங்காங்கே போலீசார் பேரி கார்டு வைத்தாலும், விபத்துகளில் இறப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிளியனுார், கீழ்கூத்தப்பாக்கம் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 23.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது, கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான பணி துவங்கியுள்ளது. 580 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியும், 950 மீட்டர் நீளத்தில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட உள்ளது.
பாலம் அமைக்கும் பணிக்கு முன்னதாக, இரு புறத்திலும், வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் அமைப்பதற்கான பணி துவங்கி நடந்து வருகிறது. வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல சர்வீஸ் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணி நடக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், கிளியனுார் மெயின் ரோடு (கடை வீதி) வழியாக சென்று பைபாஸ் சாலையை அடையலாம்.
இந்த மேம்பாலம் கட்டும் பணி ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை அமைக்கும் போதே, முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. குறிப்பாக இரும்பை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பில், 10க்கும் மேற் பட்ட கிராம மக்கள் தினந்தோறும் கடந்து செல்கின்றனர். பைபாஸ் சாலை வழியாக வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், ஆரோவில் பகுதிக்கு இந்த சாலையை தான் கடந்து செல்கின்றனர்.இந்த சாலையில், இதுவரை நடந்த விபத்துகளில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இரும்பை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், துவக்கத்தில் இருந்தே முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஆரோவில் சந்திப்பு சாலை (மொரட்டாண்டி டோல்கேட் அருகில்), இரும்பை, துருவை, ஆரோபுட் வளைவு, ஒழிந்தியாப்பட்டு, தேற்குணம் போன்ற முக்கிய சந்திப்புக்களில் ஹைமாஸ் விளக்கு இல்லாததால் விபத்துகள் ஏற்பட்டு வருவது, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும், டோல்கேட் நிர்வாகத்திற்கும் நன்கு தெரியும்.தினமும் இந்த சாலை வழியாக கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களிடம் வரி வசூல் செய்யப்படுகிறது. வருமானம் ஈட்டியும், இதுவரை அதிகாரிகள், ஹைமாஸ் விளக்கு பொருத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.