ஈரோடு: திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி, மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 335 பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், புதுமை பெண் திட்டத்தில், 2,169 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் முதற்கட்டமாக, 4,141 மாணவியருக்கும், இரண்டாம் கட்டமாக இங்கு, 2,169 மாணவியருக்கும், 43.38 லட்சம் ரூபாய் மதிப்பில் மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில், 6,310 மாணவியர் பயன் பெறுகின்றனர். இதனால் பள்ளி கல்வியுடன் தடைபடும் மாணவியர், கல்லுாரி படிப்பை தொடர வாய்ப்பாகிறது. வெவ்வேறு திருமண நிதியுதவி திட்டத்தில், 303 பயனாளிகளுக்கு, 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முறையே ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தவிர பட்டு விவசாயிகளுக்கு நவீன புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் என, ஐந்து பேருக்கு உபகரணங்கள் வழங்கியுள்ளோம்.
சி.என்.கல்லுாரி வளாகத்தில் ஒரு நுாலகம், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைத்து, போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்பட விரும்புவோருக்கு பயிற்சி வழங்கப்படும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் நிலையில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் வீதம், 10 மாதத்துக்கும், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற வசதிகளை பெற்றுத்தர முயல்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.