பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
அந்தியூர் டவுன் பஞ்., சார்பில், பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை குறித்து கண்காட்சி நடந்தது.
செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். தேங்காய் சிரட்டை, டயர்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர், பாட்டில்களை பயன்படுத்தக்கூடாதென, அதிகாரிகள் மக்களிடம் விளக்கினர். அதை தொடர்ந்து அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், மஞ்சப்பை பயண்படுத்த வேண்டும். குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி, மக்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
குண்டம் விழாவுக்கு குவியும் விறகுகள்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கவுள்ளது.
குண்டத்துக்கு விறகு வாங்கித் தருவதாக வேண்டிக் கொண்ட பக்தர்கள், தற்போது முதலே விறகு வாங்கி அனுப்ப தொடங்கியுள்ளனர்.
பக்தர்கள் அனுப்பும் விறகுகள், குண்டம் அமைக்கும் இடத்தின் அருகில் குவிக்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி கட்டடம்
நகராட்சியில் திறப்பு
தாராபுரம் நகராட்சி, 28வது வார்டில், அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. பா.ஜ. கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி தலைமை வகித்தார். நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை, அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ., நிர்வாகிகள், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வி.ஹெச்.பி.,
ஆலோசனை
தாராபுரத்தில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டத்தில், ராம நவமி விழாவை, சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வி.ஹெச்.பி., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் சேனாபதி தலைமையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் கணேஷ்குமார் பேசினார். ராமநவமி விழாவை ஏப்.,9ல் விமரிசையாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் பழனிசாமி, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பவானியில்
7 மி.மீ., மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானியில், 7 மி.மீ., மழை பதிவானது. கொடுமுடியில், 2, வரட்டுபள்ளத்தில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. ஈரோடு மாநகரில் அறிகுறி இருந்தும் மழை பெய்யாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசு பள்ளியில்
ஆண்டு விழா
காங்கேயம் ஒன்றியம் பழையகோட்டை சாலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை அருள்மொழி தலைமை வகித்தார். காங்கேயம் யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி உறுப்பினர்கள் அருண்குமார், இப்ராஹிம் கலிலுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், சுந்தர்ராஜ் பேசினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஈரோட்டில் 101 டிகிரி வெயில்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 101.12 டிகிரி வெயில் வாட்டியது.
மாவட்டத்தில் எப்போதும் வெயில் அதிகமாகவே காணப்படும். கடந்த பிப்., இறுதி முதல் கோடை வெயில் வாட்டத் துவங்கியது. பெயரளவுக்கு, 10 நாட்களில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பதிவானது. மாநகர பகுதியில் மழை இல்லாததாலும், காற்று வீசாததாலும் கடும் வெப்பமான நிலையே தொடர்கிறது. நேற்று மதியம், 101.12 டிகிரி வெயில் பதிவானது.
தி.மு.க., செயல் வீரர் கூட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், மேட்டுக்கடையில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 100வது பிறந்த நாள் விழா வரும் ஜூன், 3 முதல் அடுத்தாண்டு ஜூன், 3 வரை கொண்டாடுகிறோம். மேலும், ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக துண்டறிக்கை, திண்ணை பிரசாரம், முக்கிய இடங்களில் முகாம் நடத்துவது, வீடு தேடி சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதையே தீர்மானமாக நிறைவேற்றினர். மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
டூவீலர்கள் மோதலில்
பைக் மெக்கானிக் பலி
புன்செய்புளியம்பட்டி அருகே காவிலிபாளையத்தை சேர்ந்தவர் அப்பாச்சி, 67; விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், காவிலிபாளையம் நோக்கி சென்றார். கோப்பம்பாளையம் அருகே சாலையோரம் மொபட்டை நிறுத்தி விட்டு போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் காவிலிபாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் ஆறுமுகம், 44, ஓட்டி வந்த ஸ்கூட்டி நிலை தடுமாறி அப்பாச்சி, அவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையில் சிறிது துாரம் இழுத்து செல்லப்பட்டதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நள்ளிரவில் தீ விபத்து;
லட்சக்கணக்கில் சேதம்
ஈரோடு, நாராயண வலசில் லட்சுமி பர்னிச்சர், ஹார்டுவேர் மற்றும் பெயின்ட் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் பூட்டிய கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. அப்பகுதி மக்கள் தகவலின்படி ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றபோது, தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் மேலும் இரு தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் போராடி முழுமையாக அணைத்தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கடை உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.31.35 லட்சம் மதிப்பில்
சாலை மேம்பாட்டு பணி
நமக்கு நாமே திட்டத்தில், காங்கேயம் வட்டம், கணபதிபாளையம் ஊராட்சியில், 31.35 லட்சம் ரூபாய் மதிப்பில், மண் சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்தும் பணியை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
100 சத குடிநீர் கட்டணம் வசூல்
காங்கேயம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, குடிநீர் கட்டணம் முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: காங்கேயம் நகராட்சியில், 2022-23ம் ஆண்டுக்கான சொத்துவரி (16,747 வரி விதிப்புதாரர்கள்) காலியிட வரி (387 வரி விதிப்புதாரர்கள்), தொழில் வரி (809 வரி விதிப்புதாரர்கள்) அனைத்து இனங்களிலும், தமிழகத்தில் முதல் நகராட்சியாக, 2003ல், 100 சதவீதம் வரி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக குடிநீர் கட்டணம், 100 சதவீதம் (8,901 வரி விதிப்புதாரர்கள்) வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் தொகை, ௧.57 கோடி ஆகும். தமிழகத்தில் முதல் நகராட்சியாக அனைத்து வரி இனங்களிலும், 100 சதவீதம் வசூலித்து சாதனை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.25 லட்சத்துக்கு
பருப்பு விற்பனை
கோபி அருகே மொடச்சூரில், வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் வாரச்சந்தையில், பயிர் மற்றும் பருப்பு ரகங்கள் விற்பனை களைகட்டும். நேற்று கூடிய சந்தையில், துவரம் பருப்பு கிலோ, 120 ரூபாய், குண்டு உளுந்து, பாசிப்பருப்பு, பச்சை பயிர், தலா 110 ரூபாய், கடலைப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை, தலா 90 ரூபாய், சீரகம், 400, மிளகு, 700, வரமிளகாய், 250, புளி, 120, மல்லி, 150, கொள்ளு, 80, கருப்பு சுண்டல், 70, வெள்ளை சுண்டல், 100 ரூபாய் வரை விலைபோனது.
சந்தையில், 25 டன் அளவுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், பயிர் மற்றும் பருப்பு ரகங்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.