காங்கேயம்: ஊதியூரில் முகாமிட்டுள்ள சிறுத்தை, வேறெங்கும் இடம் பெயரவில்லை என்று, காங்கேயம் வனச்சரக அலுவலர் குழுவினர் தெரிவித்தனர்.
காங்கேயம் தாலுகா வெள்ளக்கோவில், மூலனுார் பகுதியில், கடந்த மாதத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக போட்டோ, வீடியோ பரவியது. வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சிறுத்தை நடமாட்டம் இல்லை. வீடியோக்களை பழையவை என்றனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் காங்கேயம் அருகே ஊதியூர் மலையில், சிறுத்தை பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 கி.மீ., சுற்றளவில் உள்ள ஊதியூர் காப்புக்காட்டில் பதுங்கியுள்ளது. இந்நிலையில் ஊதியூர் அருகே உள்ள கம்பிளியம்பட்டிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்து விட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து காங்கேயம் வனச்சரக அலுவலர் தனபால் கூறியதாவது: கம்பிளியம்பட்டி பகுதியில் சிறுத்தை திரிவதாக தகவல் பரவியதை அடுத்து, அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், நடமாட்டம் குறித்து எவ்வித தடயமும் இல்லை. தவறான தகவல் பரவியுள்ளது. ஊதியூர் காட்டுப்பகுதியில் தான் உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் வைத்தும், கூண்டுகள் வைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.