செய்திகள் சில வரிகளில்... கரூர் | கரூர் செய்திகள்| News in few lines... Karur | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... கரூர்
Added : மார் 26, 2023 | |
Advertisement
 


உலக தண்ணீர் தின
உறுதிமொழி ஏற்பு
கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில், உலக தண்ணீர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, உலக தண்ணீர் தின உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், துணை பொது மேலாளர்கள் மகேஷ், ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் நவநீத கிருஷ்ணன், மேலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

காவிரி குடிநீர் கேட்டு
எம்.எல்.ஏ.,விடம் மனு
குளித்தலை அடுத்த, சூரியனுாரில், 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த கிராமம் விவசாய நிலங்களுக்கு மத்தியிலும், நங்கவரம் வடிகால் வாரி மற்றும் உய்யகொண்டான் வடிகால் வாய்க்காலுக்கு இடைப்பட்ட பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் போர்வெல் நீரை குடிநீராக பயன்படுத்தி
வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்களுக்கு தடையில்லாமல் காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என, இப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் மனு அளித்தனர். விரைவில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ.,
உறுதியளித்தார்.

குட்கா விற்பனை
இரண்டு பேர் கைது
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு பகுதிகளில், நேற்று முன்தினம் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் அப்துல்லா, கண்ணதாசன் ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சதாசிவம், 52; பஞ்சமாதேவியை சேர்ந்த கணேசன், 76; ஆகிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

பன்னீர் செல்வம் அணிக்கு
புதிய நிர்வாகிகள் நியமனம்
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு, கரூர் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்
பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ஏற்கனவே, கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளராக செந்தில் குமார், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராக இளங்கோ ஆகியோரை, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.

சட்ட விரோத மதுபாட்டில்
கள் விற்பனை: 5 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில், கள் விற்றதாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., அழகுராம் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக பாப்பாத்தி, 65; மகேந்திரன், 30; சக்திவேல், 45; ஆசிர்வாதம், 60; கள் விற்றதாக பழனிசாமி, 52; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 81 மதுபாட்டில்களும், ஐந்து லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணராயபுரத்தில்
மிளகாய் அறுவடை பணி
கிருஷ்ணராயபுரம் பகுதியில், மிளகாய் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக கிணற்று நீர் பாசன முறையில் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, செடிகள் வளர்ந்து காய்கள் பிடித்துள்ளன.
சிவப்பு நிறத்தில் உள்ள மிளகாய்களை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு செடிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெயிலில் மிளகாய் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குறைந்த மகசூல் காரணமாக விலை உயர்ந்துள்ளது. கிலோ, 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கலெக்டர் அலுவலக இரண்டாம்
தளத்தில் குறைதீர் கூட்டம்
நாளை நடைபெறும் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், இரண்டாம் தளத்தில் நடக்கிறது,
இது குறித்து, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டரங்கில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் நாளை (27) கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, இரண்டாம் தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல, பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் பதிவு செய்து கொண்டு, இரண்டாவது தளம் வந்து மனுக்களை அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் தரைத்தளத்தில் பெறப்படும்.
கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரின் உதவியுடன் இலவசமாக மனுக்களை எழுதி தரலாம். மனு எழுதும் இடத்தில், அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்படும். வரிசையில் நின்று மனு கொடுப்பவர்கள், வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு, மேற்கூரைகள் அமைத்தும், அந்த பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி, பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மின்வாரிய பொறியாளர்
சங்க பேரவை கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம், கரூர் கிளை சார்பில், தலைவர் திருமுருகன் தலைமையில், பேரவை கூட்டம் கரூர் தனியார் ஓட்டலில் நடந்தது.
அதில், மின்வாரியத்தில், 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிரந்தர
தன்மைவாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறையில் விடக்கூடாது, மின்வாரிய ஊழியர்களின், 23 சலுகைகளை பறித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணப்பயன்களை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், வரும், 28 ல்
சென்னையில் கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணியில் பங்கேற்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சம்பத் குமார், கரூர் மண்டல செயலாளர் ஆனந்த பாபு, கிளை செயலாளர் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

வரும் 31ல் எரிவாயு
நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூரில் வரும், 31ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப் போக்கு தொடர்பாக வரும் புகார் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம் வரும், 31 மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. எனவே, நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுவர் இடிந்து மூதாட்டி பலி
கரூர் அருகே, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 75; இவர் மனைவி லட்சுமி, 70. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டதால், தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை துாங்கி எழுந்ததும், கந்தசாமி வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
அப்போது, லட்சுமி காபி போட சமையல் அறைக்கு சென்ற போது, அந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில், இடிபாடுகளுக்குள் லட்சுமி சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, லட்சுமியின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய ரேஷன் கடை திறப்பு
எம்.எல்.ஏ., பங்கேற்பு
அரவக்குறிச்சி அருகே, நவமரத்துபட்டியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
புதிய ரேஷன் கடையை அரவக்குறிச்சி, தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு, அத்தியாவாசிய பொருட்களை வழங்கினார். விழாவில், கரூர் சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் குணசேகரன், சேந்தமங்கலம் மேல்பாகம் பஞ்சாயத்து தலைவர் கவிதா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நித்தியானந்த், செயலாளர் கிறிஸ்டின் மேரி, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் விஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

ரயில்வே சுரங்கப்பாதையில்
முகப்பு கண்ணாடி பொருத்தம்
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. லாலாப்பேட்டை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பாதை வழியாக செல்கின்றனர்.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்கப்பாதை வழியாக வரும் வாகன ஓட்டிகள், எதிர் திசையில் வரும் வாகனங்கள் வருவது தெரியும் வகையில் சுரங்கப்பாதை தடுப்புச்சுவரில் முகப்பு கண்ணாடி அமைத்துள்ளனர். இந்த கண்ணாடி மூலம் வாகனங்கள் எதிர்திசையில் வரும் போது, இந்த பகுதியில் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் அடுத்த பகுதியிலும் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இருபுறமும் கண்ணாடி இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் இன்றி சுரங்கப்பாதை வழியாக செல்லும் வகையில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி ஆடல், பாடல்
நிகழ்ச்சி: 13 பேர் மீது வழக்கு
வேலாயுதம்பாளையம் அருகே, அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, 13 பேர் மீது போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, மூலிமங்கலத்தில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவிலுக்கு அருகில், போலீஸ் அனுமதி பெறாமல், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடப்
பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ., சரவணன் கொடுத்த புகார்படி, கரூரை சேர்ந்த நடன ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், 35; சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த ஆடியோ உரிமையாளர் விஜயகுமார், 40, உள்பட, 13 பேர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடைகளுக்கு மாற்று இடம்
வியாபாரிகள் வலியுறுத்தல்
குளித்தலை பஸ் ஸ்டாண்டு பணி நடந்து வருகிறது. உள் பகுதியில் உள்ள கடைகளை காலி செய்ய நகராட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த கடைகளுக்கு, கோவில் சுற்றுச்சுவர் ஓரமாக மாற்று இடம் வழங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை தற்காலிக நகராட்சி பஸ் ஸ்டாண்டில், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏழு கடைகளுக்கு முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம், கடைகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியது. தொடர்ந்து, கடந்த வாரத்தில் அனைத்து கடைகளுக்கும் காலி செய்ய நோட்டீஸ் வழங்கியது.
முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கிய கடைகளான பூக்கடைகள், தினசரி பேப்பர் மற்றும் புத்தகம் கடை, தேனீர் கடைகளுக்கு, பஸ் ஸ்டாண்டு உட்பகுதியில் கோவில் தடுப்புச்சுவர் ஓரமாக கடைகள் வழங்க வேண்டும் என, நகராட்சி கமிஷனருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.25.57 லட்சம் மதிப்பில்
கட்டுமான பணிக்கு பூஜை
குளித்தலை அடுத்த, சூரியனுாரில் நேற்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 25 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி, யூனியன் கவுன்சிலர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர், அரசின் சாதனைகள் குறித்து பேசினர். சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணி, மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டுவதற்கான பணி இவற்றிற்கு, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நங்கவரம் டவுன் பஞ்., துணைத்தலைவர் அன்பழகன், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் ஜுடோ மையத்தில்
மாணவர்கள் பயிற்சி தொடக்கம்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானமான, கேலோ இந்தியா மாவட்ட ஜூடோ மையத்தில், மாணவர்கள் பயிற்சியை கலெக்டர் பிரபுசங்கர் தொங்கிவைத்தார். மாவட்ட விளையாட்டு மைதான அரங்கத்தில் தடகளம், கால்பந்து, இறகு பந்து, ஹாக்கி, கையுந்து பந்து, கூடைப்பந்து போன்ற பல்வேறு மைதானங்கள் உள்ளன. தற்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா மாவட்ட ஜூடோ மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், ஜூடோ உடற் பயிற்சி ஆசிரியர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

கிருஷ்ணராயபுரத்தில்
கொசு ஒழிப்பு பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடைவீதி, மஞ்சமேடு, கோவக்குளம், பிச்சம்பட்டி ஆகிய இடங்களில், டவுன் பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் வீடுகளில் தேவையில்லாத குப்பை அகற்றுதல், கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை, நல்ல குடிநீர் மூடி வைத்தல், கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன. பணியில் துாய்மை பணியாளர்கள்
ஈடுபட்டனர்.

வாரச்சந்தையில் அடிப்படை
வசதியின்றி வியாபாரிகள் தவிப்பு
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.,ல், இரண்டு வாரச்சந்தை செயல்படுகிறது. இதில் நச்சலுார் செல்லாண்டியம்மன் கோவில் முன், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை, நங்கவரம் தெற்குபட்டி மந்தையில் திங்கள்கிழமை தோறும் மாலை நேர வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சந்தையிலும் வியாபாரிகள், பொது மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் செயல்பட்டு வருகிறது. சந்தையில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூட, போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது. பொது மக்கள், வியாபாரிகள் நலன் கருதி டவுன் பஞ்., நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளான மின் விளக்கு, விற்பனை மேடை, பொது கழிப்பிடம் வசதி செய்து தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு உணவு ஊட்டச்சத்து
பெட்டகம் வழங்கும் நிகழ்வு
கரூர் மாவட்டம், வெள்ளியணை பஞ்., சமத்துவபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், சிறப்பு உணவு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் நிலக்கடலை மிட்டாய், சோயா பவுடர், பால் பொருட்கள் கலந்த சிறப்பு உணவுகள், தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரீச்சம் பழம், 1 கிலோ, நெய், 200 கிராம், இரும்பு சத்து பவுடர், சத்து மாவு அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை
களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு குறித்தும், குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் உணவு குறித்தும், குழந்தைகளின் எடை, வளர்ச்சி அளவு குறித்து பராமரிக்கும் பதிவேடுகளை கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.
பின்னர், கடவூர் ஊராட்சி ஒன்றியம், தரகம்பட்டியில், கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத், வீராச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X