கரூர்: கோடைக்காலம் துவங்கிய நிலையில், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்குள், பஸ்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கரூர்-சேலம் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடத்தில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதை தவிர, நாமக்கல், குளித்தலை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை நிறுவனத்தில் பணிபுரிய வேலைக்கு வருகின்றனர்.
ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வது இல்லை. இதனால் பயணிகள், குழந்தைகள், லக்கேஜ் பொருட்களுடன், 500 மீட்டர் துாரம் வரை நடந்து சென்று, பஸ்களில் செல்ல வேண்டிய நிலை அவல நிலை உள்ளது. கோடைக்காலம் துவங்கிய நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்கள், அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களை அனுமதிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.