மேல்நிலை குடிநீர் தொட்டி
படிக்கட்டுகள் சேதம்
கரூர் அருகே, சணப்பிரட்டி ரயில்வே கேட் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் பல பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டியின் மேல் பகுதிக்கு செல்ல, அமைக்கப்பட்ட இரும்பு படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், தொட்டியை பராமரிக்க செல்லும் ஊழியர்கள் அச்சத்துடன் ஏறி செல்கின்றனர். எனவே, குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகளை புதுப்பிக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுற்றி முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
தானியங்கி சிக்னல் அமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் அருகே, வெள்ளியணை வளர்ந்து வரும் நகராக உள்ளது. நாள்தோறும் அந்த பகுதி வழியாக பாளையம், ஈசநத்தம், திண்டுக்கல் பகுதிகளுக்கு, அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும், வெள்ளியணை சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக, வெள்ளியணை மாறி வருகிறது. இதனால், பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வெள்ளியணை பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை வண்டிகளில்
வலை போடணும்
கரூர் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் நாள்தோறும் சேரும் குப்பை, லாரிகள் மூலம் அகற்றப்பட்டு, வாங்கல் சாலையில் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கொண்டு செல்லும் போது, சில லாரிகளில் குப்பை மேல் வலை போடுவது இல்லை. இதனால், லாரியில் கொண்டு செல்லப்படும் குப்பை, பல இடங்களில் கொட்டியப்படி செல்கிறது. அந்த இடங்களில் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், குப்பை அள்ளி செல்லும் போது, லாரிகள் மீது வலை போட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.