கரூர்: ''ஆகம நெறிமுறைகள், தமிழில்தான் இருந்திருக்க வேண்டும்,'' என, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார்.
உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் சார்பில், ஆகம தமிழ் எழுச்சி மாநாடு, கரூரில் நேற்று நடந்தது. இதில் கோவை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:
ஆகம நெறிமுறைகள் குறித்து, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், ஆகம நெறிமுறைகள் தமிழில்தான் இருந்திருக்க வேண்டும். ஆகமம் என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. ஆகம விதிமுறைகள் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இருக்க வாய்ப்பில்லை. ஆகம விதிகளை, பாதுக்காக்க தவறி விட்டோம்.
பல கோவில்களில், தமிழில் வழிபாடு நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும், தமிழில் வழிபாடு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜன், உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், தலைவர் புலவர் அப்பாவு, அமைப்பு செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் மணி, தொழிலதிபர்கள் தங்கராஜ், செங்குட்டுவன் உள்பட பலர் பங்கேற்றனர்