எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பரமத்திவேலுார், கொல்லிமலை, குமார
பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட, 8 தாலுகாக்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறவும், மூன்று
சக்கர சைக்கிள், காதோலி கருவி, செயற்கை கால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் இலவச சலுகைகள், பஸ் பாஸ் உள்ளிட்டவை பெற தினமும், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாத நிலையிலும், மாவட்டம் முழுவதிலும் இருந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரில் மனு கொடுக்கவும், கையெழுத்து வாங்கவும், சான்றுகள் பெறவும் வருகின்றனர்.
ஆனால், கலெக்டர் அலுவலகத்திலிருந்த மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமுருக தட்சணா மூர்த்தி கடந்த, 3 மாதத்திற்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அந்த பணிக்கு புதிய மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் நியமிக்காததால், தினமும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி ஒருவர் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி பெற, அதிகாலையிலேயே எழுந்து, எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரத்திலிருந்து, மூன்று பஸ்கள் பிடித்து கலெக்டர் அலுவலகம் வந்தேன். ஆனால், இங்கே உள்ள அதிகாரிகள், மாவட்ட அதிகாரி இல்லை என்றும், மனுவை கொடுத்து விட்டு செல்லுங்கள் என, சொல்லி அனுப்புகின்றனர்' என்றார்.
மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர் ஒருவர் கூறுகையில், 'கடந்த டிச., மாதத்திலிருந்து பணியாற்றி வந்த, டி.டி.ஆர்.ஓ., மாறுதலாகி சென்றதால், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் (பொ) அதிகாரியாக உள்ளார். அவர் வாரத்திற்கு, 2 நாட்கள் மட்டுமே வருகிறார். வந்த உடன் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுகிறார்' என்றார்.