ப.வேலுார்: சுற்று வட்டார பகுதிகளில், கோவில் திருவிழாக்கள் வரிசை கட்டுவதால், வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல், ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதில், பூவன், பச்சைநாடன், கற்பூரவள்ளி,
ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.
இவை, உள்ளூர் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்தில், 1,200 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பூவன் வாழைத்தார், 350 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 350-க்கும், பச்சைநாடன், 300-க்கும், கற்பூரவள்ளி, 400க்கும்-, மொந்தன் வாழைக்காய் ஒன்று, 4 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து குறைவாலும், சுற்று வட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து வருவதாலும், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.