கடலுார்: கடலுாரில் செம்மண் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என, மா.கம்யூ., சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மா.கம்யூ., கடலுார் மாவட்ட, நகர, ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம், கடலுார் சூரப்பநாயக்கன் சாவடி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பண்ருட்டி அருகே காடாம்புலியூர், பாவைகுளம், சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பெய்த மழையால், முந்திரி பூக்கள் கருதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன, இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட நிர்வாகம் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கடலுார் எம்.புதுார், திருவந்திபுரம் பகுதிகளில் செம்மண் எடுப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.