தஞ்சாவூர்:தஞ்சையில், குடி போதையில் இளைஞரின் முகத்தை சிதைத்து படுகொலை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், கரந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன், அரிவாளுடன் மூன்று இளைஞர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதால், அவர்களை தஞ்சை கிழக்கு போலீசார் தேடினர். இந்நிலையில், கரந்தை குதிரைக்கட்டி பகுதியைச் சேர்ந்த பிரதீப், 23, என்பவர் வீட்டிற்கு, சென்ற மூன்று இளைஞர்கள், முகவரி கேட்பது போல் குடிபோதையில் ரகளை செய்துள்ளனர்.
அப்போது, அவர்களுக்கும், பிரதீப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மூவரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரதீப் முகத்தை, அந்த கும்பல் சிதைத்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே பிரதீப் இறந்தார். அக்கம் பக்கத்தினர் வந்ததால், மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். கிழக்கு போலீசார் பிரதீப் உடலை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, டாஸ்மாக் கடையில் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்டதும் இவர்கள் தான் என, தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரதீப்புடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, மூவரும் திட்டமிட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
அவர்கள், கரந்தையைச் சேர்ந்த விக்னேஷ், 26, அலங்கம் சிவக்குமார், 25, வடக்குவாசல் சூர்யா, 25, என தெரியவந்தது. மூவரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பிரதீப் கஞ்சா வியாபாரி. இவர் மீது திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.