திருச்சி:தமிழகம் முழுதும் உடனடியாக, 9.22 கோடி ரூபாய்க்கு, ' ஏ4 ஷீட்' வாங்க பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், தமிழக அரசின் பேப்பர் தயாரிக்கும் நிறுவனமான டி.என்.பி.எல்., புறக்கணிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழக அரசின் அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கு வினாடி - வினா போட்டி நடத்த தேவையான, ஏ4 ஷீட் பேப்பர் வாங்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 38 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, 9 கோடியே, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, அந்தந்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், அந்தந்த பள்ளிகளே பேப்பர் வாங்கிக் கொள்ள, பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக, திருச்சி மாவட்டத்தில், மண்ணச்சநல்லுார் பள்ளிக்கு, 94 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.
அந்த பணத்தில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்றுக்குள் பேப்பர்களை வாங்கி, பள்ளிக்கல்வித்துறைக்கு, 'பில்'களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளுக்கு, 9 கோடி ரூபாய்க்கு மேல் பேப்பர்களை, டி.என்.பி.எல்., நிறுவனம் மூலம் வாங்கியிருந்தால், தமிழக அரசு நிறுவனத்துக்கு வருமானம் சென்றிருக்கும். அதை விடுத்து, அந்தந்த பள்ளிகளே வாங்கலாம் என்று சொல்வதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
வினாடி - வினா போட்டி ஆன்லைனில், பள்ளிகளில் உள்ள, 'ஹைடெக்' லேப் மூலம் நடத்தப்படுகிறது. இதில், மதிப்பெண் நகல் எடுக்க மட்டுமே பேப்பர் தேவைப்படும்.
அப்படி இருக்க, எதற்காக இவ்வளவு பேப்பர் வாங்க வேண்டும் என, தெரியவில்லை. அரசு, பேப்பர் இல்லா நிர்வாகம் என்று சொல்லி வரும் நிலையில், இப்படி கோடிக்கணக்கான ரூபாய்க்கு பேப்பர் வாங்க, நிதி ஒதுக்கியிருப்பது எதற்காக என, புரியவில்லை.
கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல், இன்னும் சில நாட்களில் செலவழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், கல்வித்துறை மூலம் இப்படியான நிதி ஒதுக்கீடும், விரயமும் செய்யப்படுகிறது. இவற்றை முறைப்படுத்த முதல்வர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.