குன்னுார்:நீலகிரியில் ஏற்பட்ட வறட்சியால் பசுந்தேயிலை மகசூல் பாதித்து, கடந்த ஓராண்டில், 5.93 லட்சம் கிலோ உற்பத்தி சரிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் வறட்சியால், தேயிலையில் கருகல், சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பசுந்தேயிலை வரத்து குறைந்து தேயிலை உற்பத்தியும் பாதித்துள்ளது.
குன்னுார் ஏல மையத்தில் நடந்த நடப்பாண்டின், 12வது ஏலத்தில், 10.48 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனைக்கு வந்தது. 8.63 லட்சம் கிலோ விற்பனையாகி, சராசரி விலை 113.94 ரூபாயாக இருந்தது. 9.83 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
விற்பனையும், சராசரி விலையும் சரிந்ததால், ஒரே வாரத்தில், 1.60 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஓராண்டில், 5.93 லட்சம் கிலோ உற்பத்தி சரிந்துள்ளது.
தேயிலை துாள் உற்பத்தி தொடர் சரிவை சந்திப்பதால் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.