ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில் நான்காவது நாளாக தோட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பூங்கா பண்ணைகளில், நிரந்தரம்; தற்காலிக பணியாளர்கள் என, 900க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தாவரவியல் பூங்காவில், 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இந்த போராட்டத்தில், ஏற்காடு, கொடைக்கானல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில், பணிபுரிந்து வரும் தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மந்தேஸ் குட்டன், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
'பூங்கா ஊழியர்களின் கோரிக்கையை அரசு உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி கோரிக்கைகளை சோக பாடல்களாக பாடினர்.