கோவை;ஒரு கோடி பயணிகளைக் கையாளும் கோவை ரயில்வே சந்திப்பை, மறுமேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோவை ரயில்வே சந்திப்பு, புறநகர் அல்லாத ரயில்வே ஸ்டேஷன்களில், 500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் இரண்டாவது பட்டியலில், 'ஏ 1' தரம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில், ஒரு கோடி பயணிகளைக் கையாண்டு, இந்த சந்திப்பு சாதனை படைத்துள்ளது.
ஆனால் தோற்றத்திலும், நவீன கட்டமைப்பு வசதிகளிலும் ஒரு தாலுகா தலைமையிடத்து ரயில்வே ஸ்டேஷனுக்கான அந்தஸ்தையே கோவை சந்திப்பு பெற்றுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் உருவான பின்னும் தெற்கு ரயில்வேயில் திட்டமிட்ட புறக்கணிப்பு நடக்கிறது. கோவை சந்திப்பு தற்போது, 150வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், மத்திய அரசின் ஸ்டேஷன் மறுமேம்பாடு திட்டத்தில் சேர்ப்பது குறித்து, தெளிவான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மறு மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டால், ஸ்டேஷன் விரிவாக்கம், கூடுதல் நடைமேடைகள், டெர்மினல் உள் கட்டமைப்பு, பார்க்கிங் என பலவிதமான வசதிகள் கிடைக்கும். ஸ்டேஷனை ஒட்டியே, மத்திய ஜவுளித்துறைக்குச் சொந்தமான ஏராளமான இடம் காலியாகக் கிடப்பதால், அதைப்பெற்று, ஸ்டேஷன் முன்புறமுள்ள கட்டடங்களுக்கு மாற்றிடம் வழங்கி, அந்த இடங்களில் ஸ்டேஷனை விரிவாக்கம் செய்யலாம்.
இதனால் கோவை சந்திப்புக்கு புதிய கட்டமைப்பும், மக்களுக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.
இதேபோல, கோவையில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், போத்தனுார் ஆகிய இடங்களில் ரயில்வேக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களையும் பயன் படுத்திக் கொள்ளலாம். அந்த இடங்களில், அதிநவீன கோச் பராமரிப்பு கிடங்கு, சரக்கு கொட்டகை, கேட்வாக் வசதிகள் மற்றும் ஸ்டேப்லிங் லைன்கள் கொண்ட போதுமான கூடுதல் பிட் லைன்களைக் கட்டமைக்கலாம்.
போத்தனுாரில் புதிய முனையம் அமைக்கும் அளவுக்கு, இட வசதியும், கட்டமைப்பும் உள்ளது. இதெல்லாம் நடக்க வேண்டுமெனில் கோவை ரயில்வே கோட்டம் அமைந்தே ஆக வேண்டும்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், கோவை ரயில்வே கோட்டம், மறு மேம்பாட்டுத் திட்டத்தில் கோவை சந்திப்பு சேர்ப்பு போன்ற அறிவிப்புகளை, இங்குள்ள தொழில் அமைப்பினரும், மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.