கோவை;அரசு வேலை வாங்கி தருவதாக, 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் காயத்ரி, 30; ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளர். அவருக்கு துடியலுார் சுப்புநாயக்கன்பாளையத்தை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் தம்பதிகள் பிரசன்னா, 29, அவரது மனைவி நிரஞ்சனா, 28, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது இருவரும் காயத்ரியிடம், சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எங்களுக்கு தெரிந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
அங்கு நீங்கள் பதிவு செய்து விட்டால், தேர்வு எழுதாமல் அரசு வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி காயத்ரி, மேலும் சிலரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
காயத்ரி உட்பட 10 பேர், அரசு வேலைக்காக ரூ.23.95 லட்சத்தை நிரஞ்சனாவிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.
இதுகுறித்து காயத்ரி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி பிரிவில், போலீசார் வழக்குப்பதிந்து நிரஞ்சனாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிரசன்னாவை தேடி வருகின்றனர்.