பீர்க்கன்காரணை: தாம்பரம் மாநகராட்சி, 59வது வார்டு, பீர்க்கன்காரணை டி.கே.சி., 1வது குறுக்குத் தெருவில், பேரூராட்சியாக இருந்தபோது, மழை நீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது, கால்வாய் கட்ட வேண்டும் என்பதற்காக, அகலம் சிறியதாக அமைத்தனர்.
ஒவ்வொரு மழையின் போதும், சுற்றியுள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் மழை நீர், இத்தெரு வழியாகவே வெளியேற வேண்டும். ஆனால், வாட்டம் இல்லாத வகையில் கால்வாயை கட்டியதால் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து, சாலையில் தேங்குகிறது.
மற்றொரு புறம், அவ்வை தெரு, டி.கே.சி., தெருவில் உள்ள கால்வாயின் நடுவில் மூன்று மின் கம்பங்கள் உள்ளன. இதன் காரணமாகவும், தண்ணீர் செல்வது தடைப்பட்டு, வெளியேறி சாலையில் தேங்குகிறது.
தற்போது, மாநகராட்சியாக மாறிவிட்டதால், இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, டி.கே.சி., தெருவில் வாட்டம் இல்லாத கால்வாயை இடித்து, தடையின்றி மழை நீர் செல்லும் வகையில், புதிய கால்வாய் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.