சேலையூர்: தாம்பரம் மாநகராட்சி, 65வது வார்டு, வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகும். அதே நேரத்தில் இந்த வார்டில் அடிப்படை பணிகள் நடப்பதே இல்லை.
சாரதா கார்டன் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதித்து, சாலையை முறையாக மூடவில்லை. இதனால், பள்ளம், மேடாக உள்ள இவ்வழியாக செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாருதி அவென்யூவில், 500 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நான்கு பாதைகளுக்கு நீண்ட நாட்களாக தார்ச்சாலை அமைக்கவில்லை.
பொன்னியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகரில் மழை நீர் கால்வாய் சரியில்லை. நெல்லுாரம்மன் கோவில் தெருவில் சாலையும் போடவில்லை, கால்வாயும் முறையாக இல்லை. நியூ பாலாஜி நகர், கே.வி.கே., நகர் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
இப்பிரச்னை குறித்து, அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இந்த வார்டை புறக்கணிப்பதாக, அங்கு வசிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.