கொட்டிவாக்கம்: பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கத்தில் மீனவர்கள் மிகுதியாக வசிக்கும் மீனவர் குப்பம் உள்ளது.
முத்தாலம்மன், பஜனை கோவில், பிள்ளையார் கோவில் என, எட்டு தெருக்களை உடைய இந்த மீனவர் குப்பத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், குடிநீர் பிரச்னை நிரந்தரமாக உள்ளது. இதை தீர்க்க, எட்டு மாதங்களுக்கு முன்பாக, இங்குள்ள தெருக்களில், மாநகராட்சி நிர்வாகத்தால் 'சின்டெக்ஸ்' தொட்டிகள் அமைக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.
ஆனால், விழா நடத்தப்பட்ட பின், சின்டெக்ஸ் தொட்டியில் இதுவரை, குடிநீர் நிரப்புவதற்கு லாரிகள் வரவில்லை. நிறுவப்பட்ட அனைத்து தொட்டிகளும் பாழடைந்து, வீணாகும் நிலையில் உள்ளன.
கண் துடைப்புக்காக குடிநீர் தொட்டியை அமைத்து, அதற்கு விழாவும் நடத்தி, மக்களை ஏமாற்றிவிட்டனர்.தவிர, தெருக்களில் உள்ள மழை நீர் வடிகால்கள் உடைந்தும், சேதமாகியும், குப்பை கழிவுகள் சேர்ந்தும் காணப்படுகின்றன.
இவற்றை சீர் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொட்டிவாக்கம் வார்டுக்கு உட்பட்ட இதர பகுதிகளின் வளர்ச்சியில் உரிய கவனம் செலுத்தும் மாநகராட்சி நிர்வாகம், மீனவர் குப்பத்தை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மீனவர் குப்பத்தை நேரில் பார்வையிட்டு, இங்கு அமைக்கப்பட்டுள்ள 'சின்டெக்ஸ்' தொட்டிகளில் தினமும் நீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.