திருப்போரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருப்போரூர் ஒன்றியம் கோவளத்தில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று மாலை, படகுப்போட்டி நடந்தது.
திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலரும் ஒன்றிய சேர்மனுமான இதயவர்மன் வரவேற்றார்.
இதில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 25 மீனவர் குப்பங்களில் இருந்து, படகுகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க., இளைஞர் அணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
படகுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
கானத்துார் ரெட்டிக்குப்பம் முதலிடமும், கோவளம் இரண்டாமிடமும், செம்மஞ்சேரி குப்பம் மூன்றாம் இடமும் பிடித்தன.
முதல் பரிசாக பைபர் படகு, இரண்டாம் பரிசாக, 10 குதிரைத்திறன் கொண்ட படகு இன்ஜின், மூன்றாம் பரிசாக சிறிய படகு ஆகியவை வழங்கப்பட்டன.