கணவர் கொலை மனைவி தலைமறைவு
திருநகர்: குடும்ப பிரச்னை காரணமாக கணவன் சர்க்கரை 51, தலையில் கல்லை போட்டும், சரமாரியாக வெட்டியும் கொலை செய்து தலைமறைவான மனைவி அன்னலட்சுமியை போலீசார் தேடுகின்றனர்.
தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். அ.ம.மு.க., பகுதி செயலாளராகவும் இருந்தார். அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த சர்க்கரையின் தலையில் அவரது மனைவி அன்னலட்சுமி கல்லை போட்டும், உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்து தலைமறைவானார். திருநகர் போலீசார் அன்னலட்சுமியை தேடுகின்றனர்.
நகை பறிப்பு
அலங்காநல்லுார்: பெரியஊர்சேரி ராமமூர்த்தி 36, அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோழிப்பண்ணைக்கு ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, ராமமூர்த்தியிடம் இருந்த மூன்று பவுன் நகை, அலைபேசியை பறித்து சென்றனர். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுவிற்ற 6 பேர் கைது
அலங்காநல்லுார்: எஸ்.ஐ.,க்கள் கஜேந்திரன், திருவள்ளுவன், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சுரேந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் புதுப்பட்டி. மேலச்சின்னம்பட்டி, அ.கோவில்பட்டி, கல்லணை கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்பகுதிகளில் மது விற்ற செந்தில்குமார் 39, மகாலிங்கம் 54, முத்துலட்சுமி 46, சுரேஷ்பாண்டி 49, பழனிகுமார் 47, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 109 மது பாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.
* பேரையூர்: கள்ளிக்குடி தாலுகா போலம்பட்டி முருகேசன் 50. இவர் அதே ஊரில் பஸ் ஸ்டாப்பில் மது விற்றார். ரோந்து சென்ற வில்லுார் போலீசார் அவரை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி----------------------------
அலங்காநல்லுார்: குமாரம் தெய்வேந்திரன் மகன் ஜெயசூர்யா 20, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மதுரையிலிருந்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார். ரங்கராஜபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் இறந்தார். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
மேலுார்: கல்லம்பட்டி நொண்டிச்சாமி 35, பெயின்டர். நேற்று மதியம் அட்டப்பட்டி - கல்லம்பட்டிக்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. மேலுார், செக்போஸ்ட் பகுதியில் சென்ற போது வேன் மோதியதில் இறந்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரிக்கிறார்.
---மூவருக்கு 'குண்டாஸ்'
மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டு காலனி மலையாளம் மகன்கள் ஜீவமணிகண்டன் 21, மணிராஜா 22. மதுரை கரிசல்குளம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜீவா 20. இவர்கள் மூவர் மீதும் கொள்ளை, கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயல்பாடு அமைந்ததால் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.