ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் ஊராட்சியில் அம்மா பூங்கா அருகே ராமநாதபுரம், சிவகங்கை பனை வெல்ல உற்பத்தி சங்கம் பராமரிப்பில் பிரதான சாலை அருகில்உள்ள இடத்தில் தனியாரால் ஆறு கடைகள் கட்டப்பட்டு அவற்றின் வருவாய் அவர்களுக்கு செல்கிறது.
ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களில் அங்கம் வகிக்கும் பெண்கள் பனை ஓலை கைவினைப் பொருள்கள் மூலம் உரிய முறையில் விற்பனை செய்வதற்கும், சந்தைப்படுத்தவும் உரிய இட வசதி இன்றி சிரமப்படுகின்றனர்.
பனை வெல்ல உற்பத்தி சங்க சொசைட்டியின் நோக்கம், அவற்றின் செயல்பாடுகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ஊராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களின்வாழ்வாதாரத்திற்காக பனை ஓலையில் பல்வேறு வகை கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.சணல் மூலம் பை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பனைவெல்ல கூட்டுறவு சங்க சொசைட்டி பராமரிப்பு இடத்தில் லாப நோக்கில் தனியார் ஆக்கிரமித்து வணிக வளாகமாக மாற்றியுள்ளனர்.
கருப்பட்டி, பனை ஓலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நோக்கம் இதனால் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே இந்த இடத்தை மீட்டு தரக் கோரி ரெகுநாதபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர், பி.டி.ஓ., கீழக்கரை தாசில்தார் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். பல ஆண்டுகளாக இத்தொடர்போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஊராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.