மயிலம் : விபத்தில் சிக்கிய 3 பேரை, மயிலம் எம்.எல்.ஏ., ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்குட்பட்ட மேல் ஒலக்கூர் கிராமத்தில் நேற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. இதை திறந்து வைக்க மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் காரில் சென்றார்.
விழுக்கம் கூட்ரோடு அருகே சென்றபோது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து 'பைக்'கில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம் மேல்பென்னாத்துாரை சேர்ந்த அரவிந்த், 28; அவரது மனைவி எழிலரசி, 24; மற்றும் ராமஜெயம், 30; ஆகியோர் ரோடு ரோலரின் மீது மோதிய விபத்தில், சாலையில் விழுந்து கிடந்தனர்.இதனைப் பார்த்த எம்.எல்.ஏ., சிவக்குமார் உடனடியாக காரை நிறுத்தி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களின் மொபைல் போன் எண்களை வாங்கிய எம்.எல்.ஏ., மருத்துவமனையில் சேர்ந்த பின், அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.