கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையத்தில் பட்டா மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடைத்தரகரை கைது செய்த போலீசார் தலைமறைவான வி.ஏ.ஓ., வை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துாரை சேர்ந்தவர் வெங்கடேசன், 40; விவசாய கூலித் தொழிலாளி. இவரது நிலத்திற்கு பட்டா மாற்றம் கோரி கரடிசித்துார் வடக்கு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். வி.ஏ.ஓ., பெரியாப்பிள்ளை பட்டா மாற்றம் செய்ய, வெங்கடேசனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
வெங்கடேசன் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். கடந்த 24 ம் தேதி போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை வி.ஏ.ஓ.,விடம் கொடுப்பதற்கு வெங்கடேசன் சென்றார்.
அவர் அலுவலகத்தில் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, கச்சிராயபாளையம் வந்து பணத்தை கொடுக்குமாறு வி.ஏ.ஓ., தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வெங்கடேசன் கச்சிராயபாளையம் சென்றார். லஞ்ச பணத்தை வாங்குவதற்கு கரடிசித்துாரை சேர்ந்த மாரி மகன் பொன்னுசாமி, 40; என்பவரை வி.ஏ.ஓ., அனுப்பினார். சற்று துாரத்தில் வி.ஏ.ஓ., பெரியாப்பிள்ளை நின்றுள்ளார்.
பொன்னுசாமியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர். போலீசாரை கண்டதும் வி.ஏ.ஓ., அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
போலீஸ் விசாரணையில், வி.ஏ.ஓ., பெரியாப்பிள்ளையின் இடைத்தரகராக பொன்னுசாமி செயல்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பொன்னுசாமியை கைது செய்த போலீசார் வி.ஏ.ஓ., பெரியாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.