வடலூர் : 'என்.எல்.சி., பிரச்னையில் ஓட்டுக்காக வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம் வடலுாரில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி., நிறுவனம் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க போகிறது என சொல்கின்றனர். அவரும் மத்திய அமைச்சர், எம்.பி.,யாக பதவியில் இருந்தார். அப்ப என்.எல்.சி. பிரச்னை தெரியலையா?
ராஜ்யசபா எம்.பி.,யா இருக்கார். அங்க என்.எல்.சி., நில எடுப்பு பிரச்னை குறித்து பேச வேண்டியது தானே? அதை விட்டு, இங்க வந்து மக்களை தூண்டிவிட்டு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. இதன் பின்னணி வரும் நாடாளுமன்ற தேர்தல். கடலூர், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலும் ஓட்டுக்காக என்.எல்.சி., குறித்து வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
தற்போது ஆட்சியில் நாங்கள் உள்ளோம். எங்களுக்கு தெரியாத தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரிகிறது என தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதிகளில் தி.மு.க., உறுப்பினர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., என்.எல்.சி., பிரச்னை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது. ஒப்பந்த தொழிலாளர், நிலம் எடுப்பு பிரச்னை என எதையுமே அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கண்டு கொள்ளவில்லை. இப்ப போராட்டம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.