கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் ஊராட்சி துணைத் தலைவியின் மகன் கொலை வழக்கில், இரு சிறுவர்கள் உட்பட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ, 19; மாணவர். இவரது தாய் செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி துணைத் தலைவி.
கடந்த 24ம் தேதி ஜெகன்ஸ்ரீ திடீரென காணாமல் போனார்.
இது தொடர்பாக, வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான ஜெகன்ஸ்ரீயை தேடினர்.
இந்நிலையில், மதுபோதையில் நான்கு பேர் சேர்ந்து ஜெகன்ஸ்ரீயை கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்து விட்டதாக போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு, தகவல் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் சிலர் சம்பவ இடத்துக்கு சென்று ஜெகன்ஸ்ரீயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, ஜெகன்ஸ்ரீயின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், வாலிபர் ஜெகன்ஸ்ரீ கொலை தொடர்பாக, அங்கமுத்து மகன் அய்யப்பன், ரவிச்சந்திரன் மகன் அபிலரசன் மற்றும் 2 சிறுவர்களை வரஞ்சரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.