செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடைகளுக்காக நாள் ஒன்றுக்கு 200 டன் அளவிற்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயம் சார்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 55 சதவீதம் அளவிற்கு வேளாண்மை பயிர்களும், 45 சதவீதம் அளவிற்கு தோட்ட பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களை விட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலம் இல்லாதவர்கள் கறவை மாடுகளை அதிகளவில் வளர்க்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் 5 முதல் 20 மாடுகள் வரை வளர்க்கின்றனர்.
மாவட்டத்தில் மொத்த பயிர் சாகுபடியில் நெல் சாகுபடி 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு போதிய வைக்கோல் கிடைப்பதில்லை.எனவே, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களில் வைக்கோல் வாங்குகின்றனர்.
செலவு குறைவு
விழுப்புரத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சுங்கச் சாவடிகள் இல்லை. துாரமும் குறைவு. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் வைக்கோல் வாங்குகின்றனர்.
வைக்கோல் வாங்க கால்நடை வளர்ப்பவர்கள் வருவதில்லை. சொந்தமாக லாரி வைத்துள்ள நுாற்றுக்கும் மேற்பட்டோர் வைக்கோல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அறுவடை சீசன்
விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர நெல் அறுவடை நடைபெறும் டிசம்பர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை வைக்கோல் விலை குறைவாக இருக்கும். இந்த நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை வளர்ப்பவர்கள் ஆண்டு முழுவதிற்குமான வைக்கோலை வாங்குகின்றனர். ஒரு கால்நடைக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 50 முதல் 60 கட்டு வைக்கோலை இவர்கள் இருப்பு வைக்கின்றனர்.
பு ரோக்கர்கள் இல்லை
கிருஷ்ணகிரி மாவட்ட வியாபாரிகள் சொந்த லாரியுடன் நெல் அறுவடை நடக்கும் இடத்திற்கே வருகின்றனர். புரோக்கர்கள் இன்றி விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி 25 கிலோ எடை கொண்ட வைக்கோல் கட்டுகளை 130 முதல் 150 ரூபாய்க்கு வாங்குகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டதில் 230 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் 40 முதல் 50 கட்டு வைக்கோல் கிடைக்கிறது. ஒரு கட்டு வைக்கோலுக்கு கட்டுக் கூலி, ஏற்று கூலி என 65 ரூபாய் வரை செலவாகிறது.
செலவு போக விவசாயிகளுக்கு 3,000 முதல் 3,500 ரூபாய் வரை வைக்கோல் மூலம் வருவாய் கிடைக்கிறது. நெல் அறுவடை குறையும் போது, வைக்கோல் விலை கட்டு 200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
தினமும் 200 டன்
ஒரு லாரியில் 170 முதல் 200 கட்டு வைங்கோலை ஏற்றுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 டன் (50 லோடு) வைக்கோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்கிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை அதிகமாக இருக்கும்போது, நாள் ஒன்றுக்கு 300 டன் அளவிற்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது.
சீ ரான விலை
கிருஷ்ணகிரி மாவட்ட வியாபாரிகள் வருகையால் விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கோல் விலை சீரான நிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் கிடைப்பதால், வைக்கோல் வர்த்தகம் இரு மாவட்ட விவசாயிகளுக்கும் பயனுள்ளதாகவே உள்ளது.
லாரிகளில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் போது தீப்பிடித்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை. இதனால், வைக்கோல் ஏற்றிச் செல்ல வாடகைக்கு லாரி, வேன்கள் கிடைப்பதில்லை. சொந்தமாக லாரி வைத்திருப்பதுடன், டிரைவர்களாகவும் இருப்பவர்களே வைக்கோல் வியாபாரம் செய்கின்றனர். தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் லாரி உரிமையாளர்களே மிகுந்த கவனத்துடன் லாரியை ஓட்டிச் செல்கின்றனர்.இதையும் மீறி கடந்த மாதம் செஞ்சி அருகே மின் கம்பியில் உரசி வைக்கோல் தீ பிடித்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி தீக்கரையானது. இந்த லாரிக்கு இழப்பீடு பெற முடியாது.விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் வரை 150 கி.மீ., துாரத்திற்கு சுங்கச் சாவடிகள் இல்லை. இருப்பினும் வழியில் 4 முதல் 6 இடங்களில் போலீசார் லாரிகளை நிறுத்தி பணம் வசூலித்து விடுகின்றனர். இதனால் 300 முதல் 400 ரூபாய் வரை செலவாகிறது என லாரி டிரைவர்கள் கூறுகின்றனர்.