மதுரை: போராட்டத்தால் தனியார் பால் நிறுவனங்கள் ஒரு நாள் கொள்முதலை 15 ஆயிரம் லிட்டர் வரை அதிகரித்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து அடம்பிடிப்பதால், ஆவின் நிர்வாகம் கூடுதல் இழப்பை சந்தித்து வருகிறது.
ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.7 ஊக்கத் தொகை வழங்க கோரி மார்ச் 11 முதல் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவினுக்கு பால் வழங்குவதை ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் குறிப்பிட்ட அளவு பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் தங்கள்எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே தனியார்நிறுவனங்கள் தங்கள் பால் கொள்முதலை அதிகரித்துள்ளன. இதனால் ஆவினுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 28, 29, 30ல் தமிழ்நாடு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சொசைட்டிகள் முன் கறவை மாடுகளை நிறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரம்அடைந்தால் ஆவினுக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் உற்பத்தியாளர் மூலம் 1.35 லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு வழங்கப்பட்டு வந்தது. போராட்டத்தால் தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டரை ஆவின் இழந்துஉள்ளது. இதற்கிடையே தனியார் பால் நிறுவனங்கள்தங்கள் கொள்முதலை நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் லிட்டராக அதிகரித்துஉள்ளது.
ஆவினுக்கு ஒரு லிட்டர் ரூ.32க்கு உற்பத்தியாளர் வழங்கிய நிலையில், அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40 கொடுத்து கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஆவினுக்கு செல்லும் பால் அளவு கடுமையாக குறைந்துள்ளது.
இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது. தனியாருக்கு பால் தாரை வார்ப்பதை அரசு தடுக்க வேண்டும். ஆவின் 'அடம்' பிடிக்காமல் உற்பத்தியாளர்கள் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.