ஈரோடு: வாயில் கறுப்பு துணி கட்டி, ஈரோட்டில் காங்., கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுலுக்கு இரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது
எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட தலைநகரங்களில் காங்., சார்பில் சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என, காங்., மாநில தலைவர் அழகிரி தெரிவித்திருந்தார்.
இதன்படி, நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், மாநகர் மாவட்ட காங்., சார்பில் சத்யாகிரக போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, எம்.எல்.ஏ. இளங்கோவன் மகன் சஞ்சய், சிறுபான்மை பிரிவு பாஷா, மண்டல தலைவர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, வாயில் கறுப்பு துணி கட்டி இருந்ததோடு பூட்டும் போட்டிருந்தார். ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின் கலைந்து சென்றனர்.
* வடக்கு மாவட்ட காங்., சார்பில் புன்செய்
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகம் காந்தி சிலை முன் நடந்த போராட்டத்துக்கு, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அமைதியாக அமர்ந்து கண்டனத்தை பதிவு செய்தனர்.