ஈரோடு: ஈரோடு சோலாரில், ரூ.63.50 கோடி செலவில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சி ஒருங்கிணைந்த மத்திய பஸ் ஸ்டாண்டில் வெளியூர், டவுன், மினி பஸ்கள் தனித்தனியாக நிறுத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதி விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, தற்போது ஈரோடு பஸ் ஸ்டாண்ட் தவிர புறநகர் பகுதிகளில் இரு பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் கரூர் சாலையில், ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியிலும், வட மாவட்டங்களை இணைக்கும் வகையில் சத்தி சாலையில் சூளை அடுத்துள்ள கனிராவுத்தர்குளம் பகுதியிலும், இரு பஸ் ஸ்டாண்டுகளை உருவாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
முதல்கட்டமாக சோலாரில், 24 ஏக்கர் பரப்பளவில், 63 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. 80 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமையவுள்ள பஸ் ஸ்டாண்டில் தரைதளம், 7,746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம், 4,260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை, 5,378 சதுரமீட்டரிலும் அமைக்கப்பட உள்ளது. சுழற்சி பகுதி, 3,317 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
பஸ் ஸ்டாண்டில், 134 கடைகள், 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் டூ வீலர் ஸ்டாண்ட், ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான இடவசதி மேற்கொள்ளப்பட உள்ளன. டைம் கீப்பர் அறை, பஸ் பயணச்சீட்டு முன்பதிவு அறை, கழிப்பறைகள், வெளிமாவட்ட பயணிகள் அமர்வதற்காக தனி அறை என, பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டப்பட்டு
வருகிறது.
தற்போது வரை கட்டுமான பணிகள், 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தாண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மதுரை, நெல்லை, துாத்துக்குடி, திருச்சி, கரூர், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த பஸ்கள் இங்கே நிறுத்தப்படும். இதனால் ஈரோடு மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், பெருமளவு குறையும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.