புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள, காவிலிபாளையம் குளத்திற்கு அத்திக்கடவு தண்ணீர் வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 145 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது ஈரோடு மாவட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு குழாய் வழியாக பம்பிங் செய்து, வெள்ளோட்ட பணி நடந்து வருகிறது.
புன்செய் புளியம்பட்டி அருகே, 489 ஏக்கர் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் அமைந்துள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ், குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர குழாய் பதிக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்த நிலையில், வெள்ளோட்ட அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு காவிலிபாளையம் குளத்திற்கு அத்திக்கடவு தண்ணீர் குழாய் வழியாக வந்து சேர்ந்தது. செந்நிறத்தில் தண்ணீர் வந்ததை பார்த்த அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அத்திக்கடவு தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
பூ துாவி வணங்கினர்.
குளத்திற்கு தண்ணீர் தொடர்ச்சியாக வந்தால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நீரூற்று கிடைத்து நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் தடையில்லாமல் நடைபெறும் என, விவசாயிகள்
தெரிவித்தனர்.