புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
அணையின் மொத்த நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, இரண்டு லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில மாதங்களுக்கு முன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நீர்மட்டம், 104 அடிக்கு மேல் உயர்ந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜன.,21 முதல், கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்பட்டது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று அணைக்கு நீர்வரத்து, 611 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை நீர் மட்டம் சரிந்து நேற்று, 90.03 அடி; நீர் இருப்பு 21.6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்துக்கு, 600 கன அடி, குடிநீர் தேவைக்காக, 200 கன அடி என மொத்தம், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.